Tuesday 9 February 2016

கடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது

பள்ளியில் படிக்கும்போது  'கிராப்ட் அவர்' உண்டு, சிறிய அளவில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.
அதனை சொல்லிதர தனியாக ஆசிரியரும் இருப்பார். எங்கள் ஆசிரியர் ஓய்வு பெரும் வயதை அடைந்தவர், அவரே "லைபரரி"க்கும் பொறுப்பு வகித்தார்.

சாட்டிலைட் டிவி அறிமுகமான காலம் அது. மூன்று மணி நேரம் (மாலை தொடங்கி இரவு வரை) மட்டும்தான் நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகும்.

அதனால் அந்த கால கட்டத்தில், கதை புத்தககங்கள் படிக்கும்  பழக்கம் அனேகமாக அனைவருக்கும் இருக்கும். அம்புலி மாமா புத்தகத்திற்கு அடிதடி நடப்பதெல்லாம் சகஜம்.

ராஜேஷ்குமார் நாவெல் படித்துவிட்டு சாண்டில்யன் கதைகள் பக்கம் எனது கவனம் திரும்பிய நேரம் அது.

நண்பன் மூலம் "கடல் புறா" அறிமுகம் ஆகியது. அவன் கொடுத்த பில்ட் அப்பில் கடல் புறாவை படிக்காமல் தூங்கவே கூடாது  என்ற அளவுக்கு நிலவரம் கலவரம் ஆகியது.

இப்பொழுது போல் "பிடிஎப்" வசதி இல்லாத காரணத்தால் "புறாவை" எங்கு பிடிக்கலாம் என அலசி ஆராய்ந்ததில் பள்ளியின் லைப்ரரியில் புறா இருப்பதாக தகவல் கிடைத்தது. 

புத்தக ஷெல்ப் முழுவதும் பலமுறை கிரிவலம் வந்தும் புறா சிக்கவில்லை.

பார்த்துக்கொண்டே இருந்த ஆசிரியர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து என்னை நோக்கி வந்தார்.

எனக்கு இதயம் வாய் வரை வந்துவிட்டது.

அந்த கால கட்டத்தில் ஆசிரியர்களிடம் பணிவு கலந்த மரியாதை மற்றும் பயம் மாணவர்களிடம் உண்டு.

என்ன புக் வேண்டும் சொல்லுடா தம்பி என ஆசிரியர் கேட்டார்.

கடல் புறா வேணும் சார்.


 
அதைத்தான் நானும் ஆறு மாசமா தேடிகிட்டு இருக்கேன், கிடைக்கல தம்பி, கடல் புறாவை "சுட்டு தின்னுட்டாங்கப்பா" என அவர் கொடுத்த ரைமிங்கில் மொத்த ஸ்கூல் பில்டிங்கும் குலுங்கியது.

Monday 1 February 2016

"விலையில்லா" ரோபோ

ஏகா சாரின் திருவிளையாடல்கள் அதிகம் பேரால் படிக்கப்படுகிறது என C.B.I வட்டாரத்தில் இருந்து தகவல் வந்ததால், அன்னாரின் அடுத்த திருவிளையாடல் இதோ: 

சாரைபற்றி தெரியாதவர்கள் "தல"ய  இங்கே சென்று சந்தித்து வாருங்கள்.

சாரை மீட் பண்ணியவர்கள் தொடருங்கள்.

தொடர் விடுமுறைக்குப்பின், வந்த  ஏகாவின் முகத்தில் எதையோ பறி கொடுத்த சோகம் இழையோடியது. 

மெல்ல பேச்சு கொடுத்தேன்,

என்ன சார் ஊர்ல எல்லாம் நல்லா இருக்காங்களா, விவசாயம் எப்படி போய்கிட்டு இருக்கு.  (தல ஊருக்கு செல்லும்பொழுது எல்லாம் அனைவரிடமும், உளுந்து விதைச்சிருக்கேன், வாழை போட்டு இருக்கேன் உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னு சொல்லுங்க கொண்டு வரேன் என சொல்லுவார் (சொல்லுவதோடு சரி))

அட போங்க சார், சிவில் லைப்ல ஒண்ணுமே சரி இல்லை எல்லாரும் ஏமாத்துறாங்க.

மனசு நோகுற அளவுக்கு அப்படி என்னதான் நடந்துச்சு, சொல்லுங்க சார் சொல்லுங்க.

இங்கே இருந்து (காலேஜ் இருக்கும் ஊர்) பஸ் ஸ்டான்ட் போறதுக்கு  பஸ்ல காசு கேக்குறான் சார்... சரி தொலஞ்சு போகுதுன்னு டிக்கெட் எடுத்துட்டு ஊருக்குப்போனா காட்டுல (விவசாய நிலத்தில்) வேல பாக்குற பயபுள்ளக வேல செஞ்சதுக்கு கூலி கேக்குறானுங்க.

 என்ன அநியாயம் வேல செஞ்சதுக்கு கூலி கேக்கலாமா, நம்மள மாதிரி  "இலவச சேவை" செய்ய முடியாதா?

சார் உங்களுக்கே தெரியும், நீங்கள் எல்லாம் முழிக்கும் முன்னால நான் எழுந்து போனா, எல்லாஒரும் தூங்கின பின்னாலதான் வருவேன்.(சார் ஹாஸ்டல் கம் மெஸ் இன்சார்ஜ்) நாட்டுக்காகஉழைச்சேன், இப்போ வீட்டுக்காக உழைக்கிறேன்ஆனா.....

இந்த கூலிபசங்க எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க போலிருக்கு, இப்படி இருந்தா எப்படி சார் விவசாயம் பண்ண முடியும் என அலுத்துக்கொண்டார்.

இப்படி காட்டு வேலை செய்றவங்க எல்லாம் கூலி கேட்டா விவசாயம் விளங்கிடும், பேசாம ரெண்டு ரோபோ வாங்கிப்போடுங்க சார் என்றேன்.


தல அசராம ஒரு கேள்வி கேட்டார்...

ப்ரீயா கொடுப்பாங்களா சார்.
Related Posts Plugin for WordPress, Blogger...