Tuesday 9 February 2016

கடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது

பள்ளியில் படிக்கும்போது  'கிராப்ட் அவர்' உண்டு, சிறிய அளவில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.
அதனை சொல்லிதர தனியாக ஆசிரியரும் இருப்பார். எங்கள் ஆசிரியர் ஓய்வு பெரும் வயதை அடைந்தவர், அவரே "லைபரரி"க்கும் பொறுப்பு வகித்தார்.

சாட்டிலைட் டிவி அறிமுகமான காலம் அது. மூன்று மணி நேரம் (மாலை தொடங்கி இரவு வரை) மட்டும்தான் நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகும்.

அதனால் அந்த கால கட்டத்தில், கதை புத்தககங்கள் படிக்கும்  பழக்கம் அனேகமாக அனைவருக்கும் இருக்கும். அம்புலி மாமா புத்தகத்திற்கு அடிதடி நடப்பதெல்லாம் சகஜம்.

ராஜேஷ்குமார் நாவெல் படித்துவிட்டு சாண்டில்யன் கதைகள் பக்கம் எனது கவனம் திரும்பிய நேரம் அது.

நண்பன் மூலம் "கடல் புறா" அறிமுகம் ஆகியது. அவன் கொடுத்த பில்ட் அப்பில் கடல் புறாவை படிக்காமல் தூங்கவே கூடாது  என்ற அளவுக்கு நிலவரம் கலவரம் ஆகியது.

இப்பொழுது போல் "பிடிஎப்" வசதி இல்லாத காரணத்தால் "புறாவை" எங்கு பிடிக்கலாம் என அலசி ஆராய்ந்ததில் பள்ளியின் லைப்ரரியில் புறா இருப்பதாக தகவல் கிடைத்தது. 

புத்தக ஷெல்ப் முழுவதும் பலமுறை கிரிவலம் வந்தும் புறா சிக்கவில்லை.

பார்த்துக்கொண்டே இருந்த ஆசிரியர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து என்னை நோக்கி வந்தார்.

எனக்கு இதயம் வாய் வரை வந்துவிட்டது.

அந்த கால கட்டத்தில் ஆசிரியர்களிடம் பணிவு கலந்த மரியாதை மற்றும் பயம் மாணவர்களிடம் உண்டு.

என்ன புக் வேண்டும் சொல்லுடா தம்பி என ஆசிரியர் கேட்டார்.

கடல் புறா வேணும் சார்.


 
அதைத்தான் நானும் ஆறு மாசமா தேடிகிட்டு இருக்கேன், கிடைக்கல தம்பி, கடல் புறாவை "சுட்டு தின்னுட்டாங்கப்பா" என அவர் கொடுத்த ரைமிங்கில் மொத்த ஸ்கூல் பில்டிங்கும் குலுங்கியது.

Related Posts Plugin for WordPress, Blogger...