Tuesday 9 February 2016

கடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது

பள்ளியில் படிக்கும்போது  'கிராப்ட் அவர்' உண்டு, சிறிய அளவில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.
அதனை சொல்லிதர தனியாக ஆசிரியரும் இருப்பார். எங்கள் ஆசிரியர் ஓய்வு பெரும் வயதை அடைந்தவர், அவரே "லைபரரி"க்கும் பொறுப்பு வகித்தார்.

சாட்டிலைட் டிவி அறிமுகமான காலம் அது. மூன்று மணி நேரம் (மாலை தொடங்கி இரவு வரை) மட்டும்தான் நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகும்.

அதனால் அந்த கால கட்டத்தில், கதை புத்தககங்கள் படிக்கும்  பழக்கம் அனேகமாக அனைவருக்கும் இருக்கும். அம்புலி மாமா புத்தகத்திற்கு அடிதடி நடப்பதெல்லாம் சகஜம்.

ராஜேஷ்குமார் நாவெல் படித்துவிட்டு சாண்டில்யன் கதைகள் பக்கம் எனது கவனம் திரும்பிய நேரம் அது.

நண்பன் மூலம் "கடல் புறா" அறிமுகம் ஆகியது. அவன் கொடுத்த பில்ட் அப்பில் கடல் புறாவை படிக்காமல் தூங்கவே கூடாது  என்ற அளவுக்கு நிலவரம் கலவரம் ஆகியது.

இப்பொழுது போல் "பிடிஎப்" வசதி இல்லாத காரணத்தால் "புறாவை" எங்கு பிடிக்கலாம் என அலசி ஆராய்ந்ததில் பள்ளியின் லைப்ரரியில் புறா இருப்பதாக தகவல் கிடைத்தது. 

புத்தக ஷெல்ப் முழுவதும் பலமுறை கிரிவலம் வந்தும் புறா சிக்கவில்லை.

பார்த்துக்கொண்டே இருந்த ஆசிரியர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து என்னை நோக்கி வந்தார்.

எனக்கு இதயம் வாய் வரை வந்துவிட்டது.

அந்த கால கட்டத்தில் ஆசிரியர்களிடம் பணிவு கலந்த மரியாதை மற்றும் பயம் மாணவர்களிடம் உண்டு.

என்ன புக் வேண்டும் சொல்லுடா தம்பி என ஆசிரியர் கேட்டார்.

கடல் புறா வேணும் சார்.


 
அதைத்தான் நானும் ஆறு மாசமா தேடிகிட்டு இருக்கேன், கிடைக்கல தம்பி, கடல் புறாவை "சுட்டு தின்னுட்டாங்கப்பா" என அவர் கொடுத்த ரைமிங்கில் மொத்த ஸ்கூல் பில்டிங்கும் குலுங்கியது.

Monday 1 February 2016

"விலையில்லா" ரோபோ

ஏகா சாரின் திருவிளையாடல்கள் அதிகம் பேரால் படிக்கப்படுகிறது என C.B.I வட்டாரத்தில் இருந்து தகவல் வந்ததால், அன்னாரின் அடுத்த திருவிளையாடல் இதோ: 

சாரைபற்றி தெரியாதவர்கள் "தல"ய  இங்கே சென்று சந்தித்து வாருங்கள்.

சாரை மீட் பண்ணியவர்கள் தொடருங்கள்.

தொடர் விடுமுறைக்குப்பின், வந்த  ஏகாவின் முகத்தில் எதையோ பறி கொடுத்த சோகம் இழையோடியது. 

மெல்ல பேச்சு கொடுத்தேன்,

என்ன சார் ஊர்ல எல்லாம் நல்லா இருக்காங்களா, விவசாயம் எப்படி போய்கிட்டு இருக்கு.  (தல ஊருக்கு செல்லும்பொழுது எல்லாம் அனைவரிடமும், உளுந்து விதைச்சிருக்கேன், வாழை போட்டு இருக்கேன் உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னு சொல்லுங்க கொண்டு வரேன் என சொல்லுவார் (சொல்லுவதோடு சரி))

அட போங்க சார், சிவில் லைப்ல ஒண்ணுமே சரி இல்லை எல்லாரும் ஏமாத்துறாங்க.

மனசு நோகுற அளவுக்கு அப்படி என்னதான் நடந்துச்சு, சொல்லுங்க சார் சொல்லுங்க.

இங்கே இருந்து (காலேஜ் இருக்கும் ஊர்) பஸ் ஸ்டான்ட் போறதுக்கு  பஸ்ல காசு கேக்குறான் சார்... சரி தொலஞ்சு போகுதுன்னு டிக்கெட் எடுத்துட்டு ஊருக்குப்போனா காட்டுல (விவசாய நிலத்தில்) வேல பாக்குற பயபுள்ளக வேல செஞ்சதுக்கு கூலி கேக்குறானுங்க.

 என்ன அநியாயம் வேல செஞ்சதுக்கு கூலி கேக்கலாமா, நம்மள மாதிரி  "இலவச சேவை" செய்ய முடியாதா?

சார் உங்களுக்கே தெரியும், நீங்கள் எல்லாம் முழிக்கும் முன்னால நான் எழுந்து போனா, எல்லாஒரும் தூங்கின பின்னாலதான் வருவேன்.(சார் ஹாஸ்டல் கம் மெஸ் இன்சார்ஜ்) நாட்டுக்காகஉழைச்சேன், இப்போ வீட்டுக்காக உழைக்கிறேன்ஆனா.....

இந்த கூலிபசங்க எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க போலிருக்கு, இப்படி இருந்தா எப்படி சார் விவசாயம் பண்ண முடியும் என அலுத்துக்கொண்டார்.

இப்படி காட்டு வேலை செய்றவங்க எல்லாம் கூலி கேட்டா விவசாயம் விளங்கிடும், பேசாம ரெண்டு ரோபோ வாங்கிப்போடுங்க சார் என்றேன்.


தல அசராம ஒரு கேள்வி கேட்டார்...

ப்ரீயா கொடுப்பாங்களா சார்.

Wednesday 27 January 2016

சொர்ணாக்கா vs சொர்ணாக்கா

மந்திரியுடன் மார்க்கெட் சென்று இருந்தேன். மந்திரி வெண்டைகாயை ஒடித்து பார்த்துகொண்டிருக்க நான் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

பக்கத்துக்கு கடையில் ஒரே சலசலப்பு, நம் கலாச்சாரதை பேணிக்காக்கும் பொறுப்புடன் எனது முழு கவனமும் இபோது அங்கே சென்றது.

அது வெங்காய வியாபாரம் நடக்கும் கடை, கடைக்கார பெண்மணிக்கும் கஸ்டமருக்கும் தகராறு.

ஒழுங்கா எடை போடுடி என கஸ்டமர் வாக்குவாதம் பண்ண,


நல்லாப்பாரு, நாலு வெங்காயம் கூடத்தான் இருக்கு இதெல்லாம் விவசாயிக்கு போற காசு, பேசாம வாங்கிட்டு போ என கடைக்கார  அம்மணி கூற,

அப்புறம் என்ன மயி***கு முள்ள பிடிக்குற, ஒழுங்கா எடை போடுடி என கத்திகொண்டே கஸ்டமர் இன்னும் நாலு வெங்காயத்தை எடுத்து தராசில் போட்டார்.

கடைக்கார அம்மணிக்கு வந்தது கோபம், நீ வெங்காயமும் வாங்க வேண்டாம் ஒரு ம**ம் வாங்க வேண்டாம், போடி என கஸ்டமரை துரத்த ஆரம்பித்தார். (டிஜிட்டல் தராசுக்கு மாறுங்க)

உடனே கஸ்டமரின் சுருதியில் நாலு கட்டை கீழே இறங்கி
விட்டது, ஏ போடுடி ஒனக்கு ஒன்னும் கொரஞ்சுடாது என்று செல்ல வாதத்தில் இறங்கி மீண்டும் நாலு கட்டை ஏறி ஒரு வழியாக
பெரிய வாக்கு வாததிற்குப்பின் பண்டப்பரிமாற்றம் நடந்தது.

பாவம் அந்த கடைக்கார பெண்மணி ஒரு கஸ்டமரை இழந்துவிட்டதே, என "கண்கள் பனிக்க" வீட்டுக்கு கிளம்பினேன்.

மீண்டும் அடுத்த வாரம் மார்கெட் சென்று வழமை போல் வேடிக்கை பார்க்கும் வேலையினை தொடர...

என்ன ஒரு ஆச்சரியம் கடந்த வாரம் ரணகளமாய் இருந்த,

அதே கடை...

அதே கஸ்டமர், ஆனால்...

 காட்சி மாற்றம்...

இந்தா கூட இரண்டு வெங்காயம் போட்டுக்க என கடைக்கார அம்மணி கூற, போதும், போதும் என கஸ்டமர் கூற "இதயம் இனிக்க" வீடு திரும்பினேன்.

அதற்கடுத்த வாரம்...
நானும் மந்திரியும் காய்கறிகள் வாங்கிவிட்டு மார்கெட்டை விட்டு கிளம்பும் நேரத்தில், ஏ...தம்பி இங்கே வாப்பா என எனக்கு முரட்டுத்தனமான அழைப்பு. (ஆப்பு?)

அழைத்தது, வெங்காய கடை அக்கா (அக்காவுடன் ஸேம் கஸ்டமர்).

உள்ளூர ஒரு சின்ன உதறலுடன் என்னக்கா என கேட்டேன்.

80ம் 45ச்சும் எவ்வளவுப்பா?

125க்கா.

125ம் 15ம் எவ்வளவு?

140க்கா.

பாக்க படிச்சவன் மாதிரி இருக்க (மாதிரிதானா?) சரியா கணக்குப்போடு 145 வரும். 

இல்லக்கா 140தான்.

அட என்னப்பா நீ...அவசரப்படாம "நல்லா யோசிச்சு" சொல்லு என அக்கா எகிற...

அல்ஜிப்ரா தெரியாமல் கணக்கு வாத்தியார் முன் வியர்க்கும் மாணவன் நிலைக்கு, நான் வந்து விட்ட தருணத்தில்...

என்னங்க என மந்திரியார் என்னை அழைக்க...

கணக்கு வாத்தியார் முன் முழி பிதுங்க நிற்கும்போது அந்த கிளாஸ்
அவர் முடிந்து விட்டால், எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அந்த ஆனந்தம் "என்னங்க என மந்திரியார் என்னை அழைத்தவுடன் கிட்டியது"

இதோ வரேன் என்றவாறே (சொர்ணா)அக்காவிடம் இருந்து நழுவினேன்.

இனி, மார்கெட் சென்றால், சென்ற வேலையினை மட்டும் பார்ப்பது என மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன்.


Sunday 24 January 2016

வனத்திருப்பதி

தென் தமிழகத்தில் அமைந்துள்ளது வனத்திருப்பதி.
இங்கு குடி கொண்டுள்ள இறைவன் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்.

பொங்கல் விடுமுறையில் இங்கு சென்று வரும் வாய்ப்பு அமைந்தது.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும், நாங்கள் சென்றது சனிக்கிழமை. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இலவச இட வசதி உள்ளது.



துரித தரிசனம் வேண்டும் எனில் கட்டணம் 50 ரூபாய்.

தரிசனம் முடிந்தவுடன் தீர்த்தம், துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை அனுதினமும் உள்ளதாம், புரட்டாசி சனிக்கிழமைகளில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் (மதியம் வரை இருக்கலாம்) அன்னதானம் வழங்கப்படுகிறது
தரிசனம் முடித்தவுடன் இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.


எங்கு உள்ளது:
புன்னை நகர், திருச்செந்தூர் வட்டம்.

எப்படி செல்வது:
ட்ரெயினில் சென்றால் "கச்சனா விளை" நிலையத்தில் இறங்கி கொண்டால், கோவில் நடக்கும் தூரம்தான்.
செல்லும் வழியில் படம் "பிடித்த" காட்சி

 சாலை மார்க்கமாக சென்றால்  திருச்செந்தூரில் இருந்து குரும்பூர் வழியாக செல்லலாம் (நாசரேத் செல்லும் வழி), தூத்துக்குடி வழியாக சென்றாலும் குரும்பூர் வழியாக செல்லலாம்.

திருச்செந்தூரில் இருந்து 20km தொலைவு, தூத்துக்குடியில் இருந்து 45km தொலைவு.

எங்கு தங்குவது:
திருச்செந்தூர், தூத்துக்குடியில் தங்கலாம். (புன்னை நகரிலும் தங்கும் விடுதி உள்ளது)

விருப்பமுள்ளவர்கள் சென்று வாருங்கள்.

Thursday 14 January 2016

பொங்கலுக்கு முன் ஒரு நிமிடம் ப்ளீஸ்

நம்ம ஏகா சாருடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது புது விதமான ஆராய்ச்சிகள் பல  நடந்தன.

சாரைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று வாருங்கள்.

தெரிஞ்சுக்கிட்டீங்களா, இப்போ தொடருங்கள்.

அழகான விடுமுறை தினம் அது, நண்பர் குழாம் அனைவரும் "அதிகாலை" 8.30 மணிக்கே எல்டுந்து விட்டோம்.

வழக்கம்போல் ஏகா சார் மிஸ்ஸிங், காலை கடமைகளை முடித்து விட்டு மெஸ்ஸிற்கு சென்றோம்.

அனைவருக்கும் நல்ல பசி,அந்தோ பரிதாபம் மாஸ்டர் மிஸ்ஸிங், .

வந்தார் நமது ஆபத்பாந்தவன், நான் இருக்கும் வரை யாரும் வெறும் வயித்தோட இருக்கப்படாது.

பேப்பர் படிச்சிட்டு வாங்க "அதுக்குள்ள" ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணிடுவேன் என்று சொன்னாரோ இல்லையோ,

இல்லாத போனை அட்டெண்ட் பண்ணி,

இதோ வந்திட்றேன்னு இரண்டு விக்கெட் காலி.

எதையும் தாங்கும் இதயம் கொண்ட நால்வர் அணி மட்டும் பேப்பர் படிக்க ஆரம்பித்தோம்.

வரி விளம்பரத்தைக்கூட "வரி விடாமல்" படித்து முடித்த உடனே ஏகா சார்   வெற்றிப்புன்னைகையுடன் "விருந்துண்ண" அழைத்தார்.

 "வஸ்துவை" உள்ளே தள்ளிய பின்பு ஆவலாய் ஏகா சார் எப்படி இருக்கு என்றார்.

அல்வா சூப்பர் என்றோம் அனைவரும் கோரசாய்.

போங்க சார் இது பொங்கல் என்றார்.





போங்கள் (பிழையாக எழுதவில்லை அந்த பொங்கல், "போங்கல்" ஆகத்தான் இருந்தது) சூப்பர் ஏகா சார் என்று சொல்ல யாருக்கும் வாயை திறக்க முடியவில்லை.

(ஏகா சாருக்கும்) அனைவருக்கும் இனிய பொ(போ)ங்கல்  வாழ்த்துக்கள்.





Friday 8 January 2016

ஏ.டி.எம் கொள்ளையர்கள்

தாய் பிரசவ வேதனையில் துடித்து கொண்டிருக்க, (பிறக்கப்போகும்!) குழந்தை அந்த வீட்டில் நெட் கனெக்சன் இருந்தால்தான் போகும் என்று அடம் பிடிக்கும். இது ஒரு விளம்பரத்தில் வரும் காட்சி.

பிறந்த குழந்தை அன்டிராயர் போடுதோ இல்லையோ "ஆன்டிராய்ட்"டும் கையுமாய் அலையும் இந்த காலத்திலும் "ஏ.டி.எம்"மில் பணம் எடுக்கத் தெரியாத அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

ஒரு முறை பணம் எடுக்க செல்லும் பொழுது வழக்கம் போல் வரிசையில் வராது நம் ம(மா)க்கள் சிலர் கல்யாண வீட்டிற்கு வந்தது போல் நேராக பணம் எடுக்க சென்றனர்.

"ரூல்ஸ் ராமானுஜர்கள்" வரிசையில் நானும் நீண்ட நேரம்  காத்திருந்தேன்.

எனக்கு முன் மூன்று நபர்கள் இருந்தனர், அதில் ஒரு ராமனுஜம் சாருக்கு "இயந்திர கேசியரிடம்" இருந்து பணம் கறக்கும் கலை தெரியவில்லை.

அவரின் "ராஜ முழியை" வைத்தே எடை போட்டு விட்ட ஒரு ஆத்மா வேகமாக கார்டை கொடுங்க சார் நான் எடுத்து கொடுக்கிறேன் என்றார்.

ஆஹா இப்படிபட்ட புண்ணியவான்கள் இருப்பதால்தான் வருனபகாவனும் அவ்வப்பொழுது "ஆனந்தக்கண்ணீர்" வடிக்கிறார் போல என நினைத்துக்கொண்டேன்.

நம்ம ராமானுஜம் சாரும் பவ்வியமாக, உதவ வந்த புன்னியவானிடம் கார்டு, பின் நம்பர், எடுக்க வேண்டிய தொகை போன்ற விவரங்களை கொடுத்தார்.

                                                     படம்:நன்றி இணையம்

நம்ம கேசியரும் பொறுப்பாக பணத்தை தன் வயிற்றின் மூலம் வெளியே  தள்ளினார்.

நம்ம ராமானுஜம் சாரும் நன்றி பெருக்கெடுக்க பணத்தை வாங்க கையை நீட்ட இப்பொழுதுதான் ட்விஸ்ட்!
திருவாளர் புண்ணியவான் அவர்கள் கவுண்டமணி ஸ்டைலில் "டேக் ட்வென்டி ருப்பீஸ்" என்றார்.

அதாகப்பட்டது "புண்ணியவான்" அவர்கள் பணம் எடுத்து கொடுத்ததற்கு கமிஷன் இருபது ரூபாய்!

இது எப்படி இருக்கு (நோகாமல் நுங்கு சாப்பிடுவது என்பது இதுதானோ)

Sunday 3 January 2016

த்தூ நீ எல்லாம் ஒரு ராணுவ வீரனா

கல்லூரி ஒன்றில் வேலை பார்த்த போது நேர்ந்த சம்பவம் இது.முதலில் இந்த சம்பவம் நிகழ காரணகர்த்தாவாக இருந்த அந்த புண்ணியவான் பற்றி ஒரு முன்னுரை. (இவரை, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று அழைப்போம்)

செவ்வாயில மனிதர்களை குடி வைக்க போறாங்களாம், என நாம் பேசி கொண்டிருந்தால்...

சார், செவ்வாய் குடி போறது நல்லது இல்லை, பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது புதன் கிழமை குடி போக சொல்லுங்க சார் என்பார் நம்ம "ஏகாம்பரம்" சார்.

இவ்வளவு "விவரம்" தெரிந்தவாரக இருப்பதாலோ என்னவோ சுதந்திர தின நாளில் கொடி ஏற்றும் நிகழ்வினை நடத்தும் பொறுப்பு "ஏகா"விடம் கொடுக்கப்பட்டது. 

ஒரு வாரம் நம்ம ஏகா சாரும் தூங்கவில்லை, மாணவர்களையும் தூங்க விடாமல், வைரமுத்து ரேஞ்சுக்கு ஏகப்பட்ட நோட்டுக்களை "இளைக்க" வைத்து எதோ நோட்டு எழுதி கொண்டு இருந்தார். 

அந்த ஏட்டை எங்கு சென்றாலும் எடுத்து கொண்டே போவார், அதனால் அதில் என்ன எழுதுகிறார் என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது.

கேட்டால் ஒரு மர்ம புன்னகை மட்டுமே பதிலாக வரும். சுதந்திர தினம் நெருங்க...நெருங்க...அனைவருக்கும் பி.பி, சுகர் லெவல் எகிற ஆரம்பித்து விட்டது.


விடிந்தது...ஆகஸ்ட் 15ம் வந்தது.

அனைவரும் கொடி கம்பம் அருகில் (ஒரு நாள்) தேச பக்தியுடன் ஆஜர்.


டாக்...டாக்ன்னு ஷூ சத்தம் ஒலிக்க.... அனைவரும் திரும்பி பார்க்க,நம்ம ஹீரோ விரைப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார். 

கல்லூரியின் முதல்வரும் பெருமிதத்துடன் ஏகாவின் "ஏற்பாடுகளை" கவனித்த படியே கொடி ஏற்ற தயார். 

பவ்யமாக ஏகா சார் கயிற்றினை எடுத்து கொடுக்க கொடி ஏற்றப்பட்டது. ஆனால் கொடி விரியவில்லை. சில பல சித்து வேலைகள் செய்து கொடி ("தலை கீழாக") விரிக்கப்பட்டது.

அதை பற்றிய உணர்வின்றி நம்ம ஏகா சார் பொக்கிஷமாய் பாது காத்து வந்த "அந்த நோட்டை" விரித்து வைத்து கொண்டு "நேஷனல் ஆனந்தம்" என கழுத்து நரம்பு புடைக்க கத்த சக ஆசிரியரின் மகனின் "டவுசர் ஈரம் ஆகிவிட்டது" 

இது என்னடா புது ஆனந்தம் என அனைவரும் திகைக்க, நம்ம ஹீரோ சார் "நீராரும் கடலுத்த" என தப்பும் தவறுமாக "பாட" ஆரம்பிக்க அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.  

கொசுறு தகவல்:ஏகா சார் "முன்னாள் ராணுவ வீரர்".


Related Posts Plugin for WordPress, Blogger...